WhatsApp Image 2024 02 08 at 15.16.30 2 Copy

மட்டக்களப்பில் விவசாயிகளிடம்  அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவந்த வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.07.02.2024 அன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத தராசின் மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்கள அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துவரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தராசில் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொண்டுவந்துள்ளனர். இந்த நிலையில் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசை பரிசோதனை செய்யுமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பரிசோதனை உத்தியோகத்தர்களான எம்.கிருஷ்ணானந்தன், எம்.ஆர்.எம்.றைஸ்கான் உள்ளிட்ட அதிகாரிகள் செங்கலடி மற்றும் கிரான் பிரதேசங்களில் உள்ள வயல் பகுதிகளில் லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபாரிகளின் தராசுகளை பரிசோதனை செய்தனர். இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகளும் நடப்பாண்டில் முத்திரை பொறிக்கப்படாத 3 தராசுகளுமாக 8 தராசுகளை கைப்பற்றியதுடன் 8 வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட தராசுகளை திணைக்களத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தராசுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

WhatsApp Image 2024 02 08 at 15.16.30 2 Copy WhatsApp Image 2024 02 08 at 15.16.30 WhatsApp Image 2024 02 08 at 15.16.29 WhatsApp Image 2024 02 08 at 15.15.10