
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் யாதுமானவள் ஊக்கமளிக்கும் பேச்சு பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களினால் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் 23.02.2024 அன்று இடம் பெற்றது. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை யாழ் இந்திய துணைத் துாதரகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 மாதமாக யாதுமானவள் நிகழ்வு தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் 70வது நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோயினை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு தேவையான சேவையினை றோட்டரி கழகம் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்நிகழ்வு இடம் பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள், இந்தியா விருதுநகர் றோட்டறி கழக தலைவி டீ.விஜயகுமாரி, முன்னால் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், மட்டக்களப்பு நகர் றோட்டறி கழக தலைவர் தேசபந்து எம்.செல்வராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகம், இந்தியா தமிழ்நாடு - விருதுநகர் றோட்டரிக் கழகம் ஆகியன இணைந்து அனுசரனை வழங்கியிருந்ததுடன், மட்டக்களப்பு நகர் றோட்டறி கழக தலைவர் உள்ளிட்ட கழக பிரதிநிதிகளால் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








