உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யுத்த சூழலால் இடம் பெயர்ந்து தற்காலிகமாக குடியேறி மீளவும் சொந்த இடங்களில் குடியேறுகின்ற அனைவருக்கும் அவர்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளை இலகுவாக வழங்க வேண்டும் என்ற கொள்கை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்திகரமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சும் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் செய்து கொண்ட கொள்கை திட்டத்திற்கமைய அரசாங்கத்தின் பணிப்புரையில் மாவட்ட அராசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி குறித்த மீள்குடியேற்றவுள்ள இடம் பெயர்ந்த குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகள் அரச திணைக்களங்களின் அதிகாரிகளால் இலகுவாக வழங்கப்படவேண்டுமென அரசாங்க அதிபர் சகல திணைக்களங்களையும் பணித்துள்ளார்.

இதற்கமைய இத்திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தும் பொருட்டு மாவட்ட கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு 22.08.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயலமர்வினை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இடம் பெயர்ந்த குடும்பங்களின் காணி, பிறப்பு, இறப்பு பதிவு, தேசிய அடையாள அட்டை மற்றும் அத்தியாவசிய ஆவண தேவைகளை இலகுவாக பெற்றுக்கொடுக்க தேவையான தெளிவூட்டல்கள் இங்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயா கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண பதிவாளர் நாயகம் திரு. க.திருவருள், மாவட்ட காணி உத்தியோகத்தர் திருமதி.குகதா ஈஸ்பரன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. க.குகதாஸன் உட்பட பல அதிகாரிகளால் இது பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கபட்டன.

மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களும் இந்த செயலமர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC 0786DSC 0655DSC 0660DSC 0777DSC 0645DSC 0642DSC 0646DSC 0649DSC 0664