
மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்ப கூட்டமானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானத்தி ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.03.2024 அன்று இடம் பெற்றது. சிறுபோக பயிர்ச்செய்கையானது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சுமார் 16200 ஏக்கரில் வவுணதீவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் குறித்த ஆரம்ப கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது விவசாய செயற்பாடுகளின் ஆரம்பத் திகதி, அறுவடைத் திகதி, மற்றும் விவசாய செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலுடன் தீர்வுகளும் எடுக்கப்பட்டன.
64 மில்லியன் நிதியில் வாய்க்கால் புணர்நிர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இம்முறை சிறு போகத்திற்கு உரமானியம் பெறும் போது தொழிற்பாட்டில் உள்ள வங்கி இலக்கத்தை வழங்குவதுடன் கமநல இணையத்தளத்தினுடாகவும் தங்களது விபரங்களை சரிபார்த்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என கமநல சேவை திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார். மேட்டு நில பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்திற்கான காப்புறுதி வழங்கல்கள் தொடர்பாகவும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
விதை நெல் 7000 புசல் இம்முறை விவசாய நடவடிக்கையிற்கு வழங்கல் தொடர்பாகவும், 18 - 55 வயதையுடைய கமக்காரர் ஓய்வூதிய திட்டம், விவசாயிகள் கடந்த காலங்களில் எதிர் கொண்ட சாவால்கள் மற்றும் பிரச்சினைககள் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. காட்டு யானை மனிதன் மோதல்களை தீர்ப்பதற்கு உரிய தொழில் நுட்பத்துடன் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் இதன் போது கருத்து தெரிவித்திருந்ததுடன், அதற்குரிய நடவடிக்கையினை மிக விரைவாக பெற்றுக்கொள்வதற்கான முயற்சியையும், வவுணதீவு பகுதியில் தற்காலிகமாக வனஜீவராசிகள் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கும் அவர்களுக்கான வாகன வசதிகளை பிரதேச செயலகம் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இதன் போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மத்திய மற்றும் மாகாண நீர்பாசன பொறியியலாளர்கள், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜெகன்நாத், மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.







