
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் 04.05.2024 அன்று இடம்பெற்றது.2016, 2017 ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் நீர் வாழ் உயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஆரம்ப கட்டமாக 239 எக்கர் காணியில் மீன், இறால் வளர்ப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச பிரிவின் இறால் பண்ணை, மீன் வளர்ப்பு மற்றும் கொக்கட்டிச் சோலை இறால் பண்ணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நீர் வாழ் உயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான காணிகளை வழங்குவதற்கான நேர்முக தேர்வினை மேற்கொள்ளுமாறு ஆளுநர் இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன் மக்களின் நலன் கருதி அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.
முகத்துவாரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கு, மற்றும் மீன் சந்தையை புணர்நிர்மானம் மேற் கொள்வதற்கான நிதி ஒதுக்கிடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான உத்தரவுகள் ஆளுநரினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் , மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரரூபரஞ்சினி முகுந்தன் (காணி) , வாகரை பிரதேச செயலாளர் ஜி. அருணன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், எந்திரி துளசிதாசன், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






