
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இருவரது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது. இந்த திட்டத்தினை விரைவில் நிறைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இப்பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன், மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர் திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.






