
மட்டக்களப்பில் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் முபாரக் அவர்களுக்குமிடையில் நிகழ்நிலையூடாக மாவட்ட செயலகத்தில்11.07.2024 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வசதி குறைந்த, தேவையுடைய மாணவர்கள் 1500 பேருக்கு ஆரம்பகட்டமாக ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்படவுள்ளது. மட்டக்களப்பில் எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி புலமைப் பரிசில்கள் இந்துக்கல்லூரி மைதானத்தில் வழங்கபடவுள்ளமையை முன்னிட்டு முன்னாயத்தங்களை ஆராயும் விசேட கலந்துரையாடலானது உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 11 வரை கல்வி பயிலும் வசதிகுறைந்த மாணவர்களுக்கும், க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்குமான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கபடவுள்ளது. இந்நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினரினால் 2.5 மில்லியன் நிதி உதவி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரொஸ்மன், அபிவிருத்தி லொத்தர் சபையின் வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஐ.டி.பி குமாரசிறி, கணக்காளர் எம்.வினோத், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.






