
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனோகரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டத்தை இவ்வருடமும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த மனோஹரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் 14.02.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மனோகரி நிகழ்ச்சித் திட்டத்தின் 2024 இல் அடைந்த முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எவற்றை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் நவநீதன் தெளிவு படுத்தினார். இந்த மனோஹரி உளநல சமூக நிகழ்ச்சித் திட்டம் 2023 மார்ச் மாதத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் கீழ் பிரச்சினைகளுடனான இளைஞர்களுக்கான நடக்கும் நிலையம் (walking Centre) , ஆசிரியர் பயிற்சி நிலையம் (Teacher Training Centre), பெற்றோருக்கான திறன் பயிற்சி ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டன.
கடந்த காலங்களில் இத்திட்டத்தை அமுல்படுத்திய போது வகுப்புகளுக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, மாதாந்தம் பயிற்சிகளுக்காக ஆசிரியர்களை விடுவித்தல், அதிபர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்களின் பங்களிப்பு என்பன தொடர்பான சிக்கல்கள் காணப்பட்டதாக கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை விலகல் குறைவடைந்ததுடன், கல்வி மட்ட அதிகரிப்பை அடையக் கூடியதாக இருந்தது. மேலும், ஒழுக்கம் மற்றும் சிறந்த மனப்பாங்குடைய சிறுவர் சமுதாயமொன்றையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி முரளீஸ்வரன், மாவட்ட சிறுவர் உள நல வைத்திய அதிகாரி டான் சௌந்தரராஜா, உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






