மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.02.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் ஏற்பாட்டில் சிறுபோக  நெற்செய்கை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்  இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்  நெற்பயிர்செய்கைக்கான பயிர்க்கால  அட்டவனை அறிமுகம் செய்யப்பட்டதுடன் சுற்றாடலில் சார்ஈரப்பதனை அடிப்படையாகக் கொண்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு  நெல் பூப்பதில் இருந்து அறுவடை காலப்பகுதியினை தேர்வு செய்வதனால் சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் என துறைசார் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சிறு மற்றும்  பெரிய நீர்ப்பாசன குளங்களின் நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது இரு வகையான பயிர்கால அட்டவணையினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர்,  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான   வெள்ளத்தினால் உடைவடைந்த குளங்கள் மற்றும் கால்வாய்களை மீள்கட்டுமானம், நஷ்டஈடுகள் வழங்கல்,  போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டது.