
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 05.03.2025 அன்று இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் காணப்படும் குளங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்து வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
சீரற்ற காலநிலை மற்றும் மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், குளங்களில் எற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணம் தொடர்பான விளக்கங்கள் அளிக்கை செய்யப்பட்டன. இதன் போது விவசாய அமைப்பினரினால் வெள்ளத்தினால் உடைவடைந்த கால்வாய்களை துரிதமாக புனர்நிர்மானம் செய்துதருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அடைச்சகல் குளத்தின் நீர்மட்டத்தை அதிகரித்தல், வாய்க்காலை புனர்நிர்மாணம் செய்தல், புதிய பாலங்கள், அணைக்கட்டுகளை அமைத்தல் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இப்றாகிம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம்.எஃ.ஏ. சனிர், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே. பிரதீபன், உறுகாமம் பிரதேச பொறியாளர் வை.சசிகாந், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 428 குளங்கள் காணப்பட்ட போதிலும் 226 குளங்களே பாவனையில் உள்ளதுடன் இரண்டு இலட்சம் நெற்செய்கை காணிகள் காணப்பட்ட போதிலும் 87000 காணிகள் இரு போக நிர்ப்பாசன வசதிகள் கொண்ட காணிகளாக காணப்படுகின்றது. அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவான மழைவீழ்ச்சியை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படும் மாவட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






