
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.04.2025 அன்று நடைபெற்றது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டன. மேலும் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். எதிர்வரும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் மே மாதம் 06 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அஞ்சல் வாக்கு அடையாளம் இடும் தினங்களாக 22. 04, 2025 ஆம் திகதி மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பொலிஸ், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு பிரிவுகள், 23.04.2025 மற்றும் 24.04.2025 ஆம் திகதிகளில் எனைய அரச நிறுவனங்கள், முப்படைகள், 28.04.2025 மற்றும் 29.04.2025 தினங்களில் மீள்வாக்களிப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2300 வேட்பாளர்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதுடன் அதில் 274 பேர் தெரிவாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.







