
மட்டக்களப்பு மாவட்ட சமூக நல செயற்பாடுகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு புற்றுநோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு 25.06.2025 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரு கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்ட செயலமர்வு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உதவியாளர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர்கள், சிறுவர் பாதுகாப்பு,சமூக சேவை அபிவிருத்தி, மத்தியஸ்த அபிவிருத்தி, போதைப் பொருள் தடுப்பு ஆகிய துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்டத்தில் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சகல பிரிவுகளை சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கே. இ. கருணாகரன் அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்கள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், வாய்ப் புற்றுநோய் தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய எஸ். கோகுலரமணன் தெளிவு படுத்தினார். இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உத்தியோகத்தர்கள், புற்றுநோய் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விழிப்புணர்வை பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களின் சந்தேகமான கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.







