
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தல் கல்வியையும் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வுஇ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மேற்பார்வையின் கீழ், புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. இதன் போது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தல் கல்வியையும் வலியுறுத்தும் பங்குதாரர்களின் பங்களிப்பும் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கான பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், விசேட தேவைக்குரிய மாணவர்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை உருவாக்குவதன் அவசியத்தை பங்குதாரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச. கோணேஸ்வரன், பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் விசேட தேவைக்குரியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





