
OneGov கணனி முறைமையினை வடிவமைத்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களினால் புதிய மாவட்ட செயலகத்தில் 13.01.2026 ம் திகதி கெளரவம் வழங்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் உருவாக்கப்பட்ட OneGov கணனி முறைமையானது நடைமுறைப்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மக்கள் சேவையை வினைத்திறனாக செயலாற்றும் வகையில் மாவட்ட செயலகத்திற்கும் மற்றும் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்குமான One Gov கணனி முறைமை மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அலுவலக நடைமுறையினை இலகுபடுத்தும் முறையில் மனித வளமுகாமைத்துவம், கடித முகாமைத்துவ முறைமை, கையிருப்பு முகாமைத்துவ முறைமை, கணனி உதவிச்சேவை, முன்பதிச்சேவை போன்ற இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட பல சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி கே. லக்சிகா அவர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான One Gov முறைமை தொடர்பான செயற்பாட்டு விளக்கங்கள் மற்றும் செயற்பாட்டு பிரச்சினைகள் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.ஜே.நிமாஜினி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.நிமல்ராஜ் ஆகியோரினால் செயல் முறையிலான தெரிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவி பணிப்பாளர் எம்.எம்.எம். சிந்தா முபாஸ், மைக்ரோசொப்ற் நிறுவனத்தின் பயிற்சியாளர்களின் ஆசிய பிராந்திய தலைவர் எம்.விக்னராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





