
கிழக்கு மாகாணத்திற்கான பிரதான பொங்கல் விழா 23.01.2026 ம் திகதி பாரம்பரிய முறைப்படி மிகவும் கோலாகலமாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலர்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தினசேகர அவர்களின் பங்குபற்றுதலுடன் களுமுந்தன்வெளி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலர்கள் திணைக்களத்தின் அனுசரனையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு கிராமங்கள் இணைந்து பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். பாரம்பரிய முறையில் நெல் அறுவடையினைத்தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வில் கிராமிய பாடல் நடனங்களுடன் மாட்டு வண்டியில் புதிர் நெல் எடுத்து வரப்பட்டு, நெல்குற்றி புத்தரிசியினை அதிதிகளினால் இட்டு பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன், கிழக்கு மாகாண அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர் ரங்கதான், உதவி பிரதேச செயலாளர், மேலதிக கல்வி பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தமிழர் பாரம்பரிய தைப்பொங்கலை ஏடுத்து கூறும் சிறார்களின் கண்கவர் பல் வகை நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள் என்பன இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் எமது பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்பதுடன் பழையன கழிதல் புதியன புகுதல் என்பதுடன் பொங்கல் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு கோலம், பூமாலை கட்டுதல், மாட்டுவண்டி போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மாகாண பொங்கல் விழாவில் தித்திக்கும் 15 வகையான பொங்கல் சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டதுடன், பொங்கல் பிரசாதம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.






