நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 03.12.2019 அன்று  நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதின்படி கடந்த நவம்பர் 28ம் திகதி திறைசேரியின் செயலாளர் திரு.எஸ்.ஆர் ஆர்டிகல் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு அமைய களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக பொருத்தமான அரிசி ஆலைகளினூடாக பொது ஒப்பந்த அடிப்படையில் உயர்தரத்தில் அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய இந்நடவடிக்கை இம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி அம்மாவட்டத்தில் களஞ்சியபடுத்தப்பட்டிருந்த சுமார் 1300 மெற்றிக்தொன் நெல்லை அரிசியாக்குவதற்காக தகுதிவாய்ந்த அரிசியாலைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு.வை.பி இக்பால், பிரதம கணக்காளர் திரு.கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலக கணக்காளர் திரு.கே.பிரேம்குமார், நெல் சந்தைப்படுத்தும் சபைகளின் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட தகுதியான அரிசி ஆலை உரிமையாளர்கள் பலரும் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

மாவட்டத்தில் புலிபாய்ந்தகல், மணல்பிட்டி, முள்ளாமுனை, கரடியனாறு, போரதீவு, அரசடிதீவு, கஜிவத்தை, களுவாஞ்சிகுடி ஆகிய 8 களஞ்சியசாலைகளில் நெல்சந்தைபடுத்தல் சபை கொள்வனவு செய்திருந்த நெல்லையே இவ்விதம் அரிசியாக்கி சத்தோச நிறுவனத்திற்கு ஒப்படைக்கபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பணியினை பொறுப்பேற்கும் தனியார் அரிசியாலை நிறுவன உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செவ்வனே நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் எனவும் அதிகாரிகள் தமது மேற்பார்வை கடமைகளை சிறப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இவ்விசேட கூட்டத்தில் அறிவுறுத்தல் செய்தார்.

DSC 0540 resized  DSC 0535 resized  

DSC 0523 resized  DSC 0526 resized