மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் 17.12.2019 அன்று இழப்பிட்டிற்கான அலுவலக அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று காலை 9.30 மணியளவில் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.புண்ணியமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர் திரு.எஸ்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இழப்பீட்டுக்கான அலுவலகத்திலிருந்து டாக்டர் திரு.ஜே.எம் சுவாமிநாதன், பணிப்பாளர் திரு.எஸ்.எம் பதூர்தீன், ஆலோசகர் திரு.சேகர், உறுப்பினரான செல்வி. சுமித்திரா செல்லத்தம்பி, புனர்வாழ்வு உத்தியோகத்தர்களான திரு.அருண் பிரதிபன் மற்றும் செல்வி .நிருத்தனி சிவலிங்கம் ஆகியோர் வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்று இழப்பீடுகளுக்கான நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவான சட்டத்தினை பாராளுமன்றத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
போர் காலச்சூழலில் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை மக்களிடமும் இருந்து இதுவரை யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு இறுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
இவ் இழப்பீடுகளுக்கான அலுவலகமானது பாராளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் இழப்பீட்டுக்கான அலுவலகமும் திறக்கப்பட்டு மக்களுக்கு காணி, வீடு மற்றும் உறவினர்களை இழந்த குடும்பங்களை சார்ந்தவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர், யுத்த பாதிப்பினால் அங்கவீனமானவர்கள் ஆகியோருக்கு எவ்வாறான இழப்பீடுகள் தேவை என அறிந்து சட்டமூலமாக்கி அதன் மூலமாக மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வகுத்துள்ளது.





