மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 27.01.2020 அன்று சுபவேளையான 10.35 மணியளவில் மாவட்ட செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக தலமையேற்க வந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்டசெயலக சகல உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என்போரால் வரவேற்கப்பட்டார்.
இந்த கடமையேற்பினை முன்னிட்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையிலும் புதிய அரசாங்க அதிபர் கலந்துகொண்டார்.
இந்த பதவியேற்புக்கு முன்பாக புதிய அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு நகரிலுள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவ மற்றும் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலயகுருமாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வுகளில் மத ஸ்தலங்களின் நிருவாகிகள், மாவட்டசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், செயலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
இன்று கடமையேற்ற புதிய அரசாங்க அதிபரை மாவட்டத்திலுள்ள பொதுநல அமைப்பிலுள்ள பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாவட்ட செயகத்தில் நடைபெற்ற செயலக உத்தியோத்தர்கள் சந்திப்பின் போது புதிய அரச அதிபர் தெரிவிக்கையில், சுமார் 30 வருடகாலம் யுத்த சூழலால் துன்ப காலங்களை அனுபவித்த எமது மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே எனது தலயாய கடமையாகும். நான் பிறந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்ற எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் பேறாகக் கருதுகின்றேன். எனது கடமையின் போது எமது மக்களுக்கான பணிகள் தாமதமாக சென்றடைவதை நான் ஒருபோதும் விரும்பாதவள். அந்த வகையில் மக்களுக்கான பணிகள் தாமதமாகுவதை தவிர்த்துக் கொள்ள செயலக உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்இ அரசாங்க அதிபர் என்ற இந்தப் பெரும் பொறுப்பினை தனி ஒருவராக இருந்து என்னால் முழுமையாக செயல்படுத்த முடியாது எனவே சகல பணியாளர்கள், உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குவதன் மூலமே எமது பணியினை முழுமையாக நிறைவேற்ற முடியும் எனத்தெரிவித்தார்.
.






