புதிய அரசாங்கத்தின் உரமானிய கொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறு போகபயிர்ச்செய்கையின் போது பயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உர விநியோக இலக்கினை பரிசீலிக்கும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேசிய உரச்செயலகத்தின் செயற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 12.02.2020 நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.கே.எல்.எம்.சிராஜீன், கமநல சேவைகளின் பிரதிப்பணிப்பாளர் திரு.கே.ஜகனாத், விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு பணிப்பாளர் திரு.வை.பி.இக்பால், மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.எஸ்.பேரின்பராஜா, விவசாய காப்புறுதி சேவையின் பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் உட்பட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கமநல அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இவ் வருடசிறுபோகத்தில் பெரும் நீர்ப்பாசனத்தின் கீழ் நெற்செய்கை பண்ணப்படவுள்ள 25,878 ஹெக்டெயரிலும், சிறிய நீர்ப்பாசத்தின் கீழ் 8,384 ஹெக்டெயரிலும் செய்கை பண்ணப்படவுள்ள நெற் செய்கைக்கு தேசிய உரச்செயலகத்தினூடாக உர மானியத்தை கோருவதென தீர்மானிக்கப்பட்டது. இது தவிர உப உணவுப்பயிர்களான மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம், கௌப்பி, பயறுவகைகளை எதிரகாலத்தில் செய்கை பண்ணுவது எனவும் அதற்கான மானிய உரத்தை தேசிய உரச்செயலகத்தில் பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மானிய உரவினியோகத்தை மேலும் இலகுபடுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஏனைய விவசாயிகளின் தேவைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது. வழமை போல ஏனைய மாவட்டங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் விதைப்பு மேற்கொள்ளப்படுவதனால் வழமைபோன்று மானிய உரத்தை முன்கூட்டியே உரிய காலத்தினுள் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் இதனடிப்படையில் தேவையான இலக்கினைக் கொண்டமானிய உர உத்தேச அறிக்கையை விரைவாக தேசிய உரச் செயலகத்திற்கு சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இங்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் சிறுபோக நெற்செய்கையின் போது வினைத்திறனான நீர்ப்பாசனத்தைப் பாவிப்பதென்றும் மேட்டு நிலக்காணிகளில் நெல் உற்பத்திக்கு மேலதிகமாக மேட்டுநிலப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் வினைத்திறனுள்ள நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொள்வதென்றும் கூடுதலான காணிகளை பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுமாறும் அரசாங்க அதிபர் விவசாய பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
2019 சிறுபோகத்தில் 18,293 விவசாயிகளுக்கு 23,098 ஹெக்டெயர் நெல் வயல்களுக்கு மானிய உரம் வழங்கப்பட்டுள்ளதாக இக் கூட்டத்தில் தேசிய உரச் செயலக உதவிப்பணிப்பாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.





