
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் 23.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணியின் http://www.covid19.batticaloa.dist.gov.lk என்ற வலைத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கொரோனா தடுப்பு செயலணியினையும் பொதுமக்களையும் இணைக்கும் வகையிலேயே இந்த வலைத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப கணணி, ஸ்மாட் போன், ஐ போன்களிலும் பயன்படுத்தக் கூடியவாறும் வெப்பேஜ், பேஸ்புக், இன்ஸ்டகிராம், டுவிட்டர்தளம் போன்றவற்றிலூடாகவும் தகவல்களை அனுப்பக்கூடியவாறும் இலகுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இவ்வலைத் தளத்தினூடாக பொதுமக்கள் தமது எவ்வித தேவைகளையும் கோரமுடியும் எனவும், உதாரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தமக்கு ஏற்படும் நோய் தொடர்பான விபரங்களை கூறி வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும், அம்புலன்ஸ் வசதி பெற்றுக் கொள்ளவும், அல்லது தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தனிமையினால் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அதனையும் பெற்றுக் கொள்ளமுடியும்.
இன்னும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் உணவு இல்லாமல் இருப்பவர்கள் கூட அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் கொரோனா தடுப்பு செயலணிக்கு அல்லது பொதுமக்களுக்கு உலர் உணவு, மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்க விரும்புவோர் கூட இதனூடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளையும் இங்கு பதிவிடுவதன் மூலம் அவை உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வலைத்தளத்தில் வரும் கோரிக்கைகளை 24 மணிநேரமும் அவதானித்து அமுல்படுத்தவும், அறிக்கையிடவும் விசேட குழு இயங்குவதாகவும், மேலும் இந்த இணைய வலைத்தளத்தினை தொண்டர் அடிப்படையில் வடிவமைத்துத் தந்த திரு. டானியல் பாக்கியம், ஜோயில் ஜெரோசன் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் ஊடகவியலாளர்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலமை தற்போது ஓரளவுக்கு சுமுகமாக இருப்பதுடன் இந்த நிலமை தொடர்ச்சியாக இருப்பதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும், வெளியில் வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியில் வருவதுடன் ஏனைய நேரங்களில் வீடுகளிளேயே இருந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் வந்தவர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், அன்றாடக் கூலித் தொழில் புரிபவர்களின் விபரங்கள் சகல பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலருணவு உதவிகளை வழங்க அரச சார்பற்ற நிறுவனங்கள், நலன் விரும்பிகளிடம் உதவிகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் வேல்ட் விசன் நிறுவனம் 650 உலர் உணவுப் பொதிகளையும், ஹெல்பிங்கேன்ட் அமைப்பு 100 பொதிகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதிலிருந்து ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் கிடைக்கப்பெறும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கட்டுப்பாட்டு விலையில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக மூடியிருந்த காத்தான்குடி சதோச நிறுவனம் உட்பட களுவாஞ்சிக்குடி மற்றும் சகல சதோச நிறுவனங்களும் இன்று முதல் திறந்திருக்கும் என்பதுடன் தனியார் வர்த்தகர்களும் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விநியோகிக்கக்கூடியவாறு குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு நகரில் தற்காலிகமாக கள்ளியங்காடு களஞ்சியப்பகுதியில் சதோச நிறுவனம் திறக்க உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் 24.03.2020 முதல் அவை இயங்குமென்றும் தெரிவித்தார்.
இதன்போது வைத்திய நிபுணர்களான டாக்டர். கே.ஆர். சுந்தரேசன், டாக்டர்.எஸ் விஷ்ணுகுமார் மற்றும் டாக்டர். கே. மயுரேசன் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.






