06.04.2020 ga photos resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35000 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 09.04.2020 இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரச அதிபர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த வாரம் சமுர்த்தி உதவி பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெற்றுவந்த அனைவருக்கும் தலா 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள சுமார் 17000 குடும்பங்களுக்கும் இந்த 5000 ரூபா கொடுப்பனவு அடுத்த வாரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சதோச நிறுவனத்தினூடாக மானிய விலையில் பருப்பு, ரின்மீன், சீனி, பெரியவெங்காயம், கடலை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பொருட்கள் வறிய மக்களைச் சென்றடையும் வகையில் அரச உதவி 5000 ரூபாவினைப் வழங்கும் இடங்களில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான சுமார் 2000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அரசினால் வழங்கப்படும் உதவிகளை விட அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர் சங்கம் உட்பட வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலகம் ஊடாக, பிரதேச செயலகங்கள் மூலம் சுமார் 41000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதெனவும், கிடைக்கப்பெற்ற ஒவ்வொன்றும் 1300 ரூபா பெறுமதியான பொதிகள் எனவும் இவை பிரதேச செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வருகின்ற மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் இங்கு தெரிவித்தார்.