
கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மரக்கறிச் செய்கையாளர்களது உற்பத்திகள் சந்தைப்படுத்துவதிலிருந்த அசௌகரியங்களைத் தவிர்க்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து விரைவான தீர்வினை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் பயனாக தற்பொழுது களுதாவளைப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தினூடாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டத்தின் உற்பத்திகளான மரக்கறிகள், பழவகைகள் கொள்வனவு செய்யும் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச ஊடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கமைய 15.04.2020 அன்று குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரட்னம் தலைமையில் உள்ளுர் உற்பத்தியாளர்களின் அறுவடைகளான சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2129 கிலோகிராம் பச்சைமிளகாய், 1019 கிலோகிராம் வெள்ளைக் கத்தரி, 615 கிலோகிராம் பீற்றூட், 405 கிலோகிராம் நீலக்கத்தரி, 326 கிலோகிராம் பயற்றை, 219 கிலோகிராம் வத்துவக்காய், 176 கிலோகிராம் பூசனிக்காய், 172 கிலோகிராம் வெண்டிக்காய், 67 கிலோகிராம் நாடங்காய், 39.5 கிலோகிராம் வரிப்பீக்கை போன்ற மரக்கறிவகைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறி உற்பத்திப் பொருட்கள் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மற்றும் ஊரடங்கு அமுலிலுள்ள வேளைகளில் அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
இந்த பொருட்கொள்வனவுச் செயற்பாட்டில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளர் தரனிதரன் சத்தியகௌரி, மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் திரு எம். விநோதன், மாவட்ட செயலக, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக, விவசாய மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை குறித்த மரக்கறி உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் விசேட செயற்திட்டத்தின் கீழ் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் சுமார் 6 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மரக்கறி உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதன் மூலம் தமது மரக்கறி உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கிவந்த பெரும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு உதவி புரிந்த அரசாங்கத்திற்கு இப்பிரதேச மரக்கறி உற்பத்தியாளர்களும், நியாய விலையில் மரக்கறி உற்பத்திகளை மக்கள் காலடிக்குப் பெற்றுத்தர ஆவனசெய்தமைக்கு பொதுமக்களும் நன்றி பாராட்டுகின்றனர்.







