
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழில் செய்யும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, மண்முனைப்பற்று ஆரையம்பதி, மண்முனை வடக்கு வவுனதீவு, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில்; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 1000 குடும்பங்களுக்கு சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனம் அதன் ஸ்தாபகர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் 29.05.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அறக்கட்டளை நிறுவனத்தின் மட்டக்களப்பு திட்ட உத்தியோகத்தர்களான ஆர். சாந்தசீலன், பீ. ஹஸ்ஸான் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





