
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் காணப்படும் வடிகான்கள் மழை நீர் வடிந்தோடக்கூடியவாறு சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம் 10.06.2020 அன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாகவிருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய பிரதான வடிகான்கள் குப்பைகள் நிறைந்து அசுத்தமடைந்து காணப்படுகின்றன. இவ்வடிகான்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக குப்பைகளை இடுவதனாலும் அதனை முறையாக பராமரிக்காத காரணங்களினாலும் மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன், பொதுமக்கள் வெள்ள நீரால் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதுடன் நுளம்புகள் பரவி டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதுமாகக் காணப்படுகின்றது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் அவர்களின் வேண்டுகோளில் இச்செயற்றிட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் தலைமையில் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப்படையினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
நாளை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், அரச திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பில் தற்பொழுது டெங்கு நோய் சற்று அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதனால் பொதுமக்கள் தமது சுற்றுப்புறுத்தினை சுத்தமாக வைத்திருப்பதுடன், வடிகான்களில் குப்பைகள் இடுவது, கட்டுமானப் பொருட்களான கல், மண், சீமெந்து போன்றவற்றின் மூலமாக இவ்வடிகான்களில் நீர் வடிந்தோடுவதைத் தடைசெய்வது மற்றும் எல்லைப்புற மதில்கள், கட்டுமானங்கள் அமைக்கும்போது நீர்வடிந்தோடும் பகுதிகள், வடிகான்களை தடைசெய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







