மட்டக்களப்பில் சமயங்களுக்கடையிலான பிணக்குகளைத் தணித்து சமாதானத்தினை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சர்வத அமைப்புடன் சேர்ந்து பயணிக்கத்தயார் என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்புக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான சந்திப்பொன்று 29.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பின்போது சர்வமத அமைப்பினால் இனங்களுக்கிடையில் சமாதானத்தினை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. எகட் கரிடாஸ் அமைப்பினூடாக செயற்பட்டுவரும் இந்து, முஸ்லிம், கிறுஸ்தவ சமயத் தலைவர்களையும், சிவில் சமுக பிரதிநிதிகளையும் கொண்டியங்கும் இச்சர்வமத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றியும் தகவல்கள் முன்வைக்கப்பட்டதுடன், சர்வமத அமைப்பானது அரசாங்க அதிபருடன் சேர்ந்து செயற்படவும், ஒத்துளைப்பு நல்கவும் என்றும் தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், சர்வமத அமைப்பின் ஆலோசகர்களான சிவபால குருக்கள், எம். வாமநாதன், சர்வமத அமைப்பின் செயலாளர் அருட்தந்தை ராஜன் ரொகான், மௌலவி யூ.எல்.எச்.எம். மக்கி, இணையம் சிவில் அமைப்பு பிரதிநிதி பாரதிதாசன், அமைப்பின் இணைப்பாளர் ஐ. கிரிஸ்டி உட்பட சமயத் தலைவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.







