
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுனரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் 12.11.2020 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களினது அரசாங்க அதிபர்களும், கிழக்கு மாகாண பிரதம செயலாளரும் பங்குபற்றிய விசேட கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா யஹம்பத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இம் மூன்று மாவட்டங்களினதும் தற்போதைய நிலைமைகள், முன்னெடுக்கப்பட்டு வரும் அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கோவிட் 19 கோரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மத்திய அரசு, கிழக்கு மாகாண சபை, விசேட திட்டங்கள் உள்ளிட்ட சர்வதேச மற்றம் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள், அவற்றுக்காண நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சாதக பாதகங்கள் பற்றியும், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தொடர்வதற்கான நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இவ்விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.துசித பீ. வனிகசிங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சமன் தர்ஷன பாண்டிகோரள, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.டீ.எம்.எல். பண்டாரநாயக, மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.







