
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு. மா. தயாபரன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரில் அமைந்துள்ள கோட்டை பூங்காவில் மர நடுகை வேலைத்திட்டம் 04.02.2021 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச அவர்களின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும் இம் மர நடுகை இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படை பிரவினரால் பாற்சோறு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இக் கோட்டை பூங்காவை மேலும் அழகுபடுத்துவதற்கான புனருத்தாரண பணிகள் மாநகர சபையினரால் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட செயலக கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









