
மட்டக்களப்பு முதளைக்குடா மகிளடித்தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் விசேட செயலமர்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 23.02.2021 அன்று மண்முனைப்பற்று டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் நவீனமுறையில் இறால் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட வேலைத் திட்டத்தினை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முதளைக்குடா மகிளடித்தீவு பகுதிகளில் இனங்காணப்பட்ட சுமார் 202.343 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட செயலமர்வு தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி டினேஸ் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வில் விசேட பேச்சாளர்களாக கிழக்குப் பல்கலைக்கழ விஞ்ஞான பீடத்தலைவர் கலாநிதி திருமதி. சீ.ஜீ. தேவதாசன், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வட மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் வீ. நிருபராஜ், கைத்தொழில் சார் அனுபவமுள்ள பொது முகாமையாளர் சாமிந்த பெனான்டோ, கிழக்குப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர் பேராசிரியர் திருமதி. பீ. பிரேமானந்தா உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களது ஆலோசனைகளும் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன.







