
போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் 05.03.2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் நாடுபூராகவும் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் வாகனங்களில் விழிப்புனர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகாமையில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துனை ஆலோசனை தொலைபேசி துரித இலக்கமான 1927 இன் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது.தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் திரு ஜீ. விஜயதர்சன் அவர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்கடர் அருளானந்தம், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கிவரும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் பாவனையால் துன்பப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்குமான உளவள ஆலோசனைகள் தொடராக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







