
நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்கீழ் இணைப்புச் செய்யப்பட்ட 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடைபராமரிப்பு மற்றும் சிறுபொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு எஸ். வியாழேந்திரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 25.01.2022 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்ட 287 பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பெரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும், வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்நிலையத்திலேயே அவர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சவால்களுக்கு மத்தியில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் நியமனம் பெற்றுள்ள நீங்கள் அதிஸ்டசாலிகள். கடந்தமுறை பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும்போது வெவ்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்நியமனத்தினைப் பெற்றுக் கொள்ளும் அனைவரும் குறைந்த பட்சம் இரண்டுவருடங்களாவது தங்களுக்கு வழங்கப்படும் நிலையங்களில் அவை இம்மாவட்டத்திலுள்ள தூர இடங்களாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.
மேலும் அரசாங்க அதிபர் கருணாகரன் அவர்கள் நியமனம் பெறும் பட்டதாரிகள் முன்னிலையில் கருத்து வெளியிடுகையில் அரச உத்தியோகத்தர்கள் அரசின் தாபனவிதிக்கோவை மற்றும் நிதிப்பிரமானங்களுக்கமைவாக செயலாற்றுவதுடன் அரசின் கொள்கைகளை விளங்கி செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







