
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டங்களை அமுலாக்கம் செய்வது தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் 25/02/2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்விரு சபைகளினாலும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான பொறிமுறைகள் பற்றி சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கிழக்கு மாகாணத்திற்கான அலுவகம் ஒன்றை விரைவாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனூடாக தொழில் முயற்சியாளர்களின் அனைத்துவிதமான உற்பத்திகளையும் காட்சிப்படுத்துவதனூடாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் இவற்றைக் கொள்வனவு செய்யவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் மேலும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவும்முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி. கீதா சுதாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் பீ.எம்.எம். சமீம், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு. பீ. சாயுரதன், உட்பட இவ்விரு சபைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.









