
"வட கிழக்கு சமர்" என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சைக்கிள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு 27/02/2022 அன்று மட்டக்களப்பு திருமலை வீதி ஊறனியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முன்னாள் சைக்கிள் ஓட்ட வீரர் அமரர் செல்வராஜாவின் ஞாபகார்த்தமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சைக்கிளோட்ட வீரர் திரு.ஜ.பிறேம்நாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.தி.சரவணபவன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரஸ்ரீ, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி திரு.வி.ஈஸ்பரன், கல்கி அறக்கட்டளை ஸ்த்தாபகர் திரு.என்.நர்மதன், மட்டக்களப்பு மாவட்ட சமூகபற்றாளர் திரு.வி.லவக்குமார், திரு.நடேசு உதயகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
திருமலை வீதி பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் ஆரம்பமான சைக்கிள் ஓட்டமானது கொழும்பு திருமலை வீதி வழியாக கல்லடி மணிக் கூட்டு கோபுரத்தை அடைந்து அங்கிருந்து வாழைச்சேனை சுற்று வளைவினை அடைந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்தினை சென்றடைந்தது. இவ் சைக்கிள் ஓட்டமானது 102 கிலோ மீற்றர் தூரம் ஓட்டமானதாகும்.
இதில் முதலாம் இடத்தினை திரு.பி.சதீஸ்காந்தும் இரண்டாம் இடத்தினை திரு.பாலரசனும் (முல்லைத்தீவு) மூன்றாம் இடத்தினை திரு.ரி.நிரல்சனும் நான்காம் இடத்தினை திரு.ஜ.பிரேம்நாத்தும் ஐந்தாம் இடத்தினை திரு.வி.பார்த்தீபனும் பெற்றிருந்தனர்.
கடந்த மூன்று வருடங்களாக சைக்கிளோட்டப் போட்டிகள் இடம்பெற்றிருக்காத நிலையில் இவ்வாண்டு இப் போட்டியானது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









