கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட இலக்கிய விழா போட்டித் தொடரில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 03/03/2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் திரு.அ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 03/03/2022 அன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.கே.கருணாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எஸ். ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட மாவட்ட செயலக கலாசார பிரிவின் உத்தியோகத்தர்கள், 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வெற்ற்றியாளர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கலாசார திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் மாவட்ட இலக்கிய போட்டிகளை நடாத்திவந்த நிலையில் கடந்த வருடங்களில் போட்டிகள் நடாத்தப்பட்ட போதிலும் கொவிட் - 19 சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெறாத நிலையில் கடந்த இரண்டு வருடங்களிலும் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வே மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலர், சிறுவர், கனிஸ்ட , சிரேஷ்ட மற்றும் திறந்த மட்ட போட்டிகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி மூலப் போட்டிகளிலும் கவிபாடல், கட்டுரை, பார்த்து எழுதல், பாடல் நயத்தல், சிறுகதை போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியிட்டிய மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கே இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஒழுங்குசெய்யப்பட்ட "ஒழுக்க விழுமியங்களை பாதுகாப்பதில் சமயங்களின் பங்களிப்பு" எனும் தொனிப்பொருளிலான கருத்துரைகளும் மாணவர்களுக்காக இதன் போது வழங்கிவைக்கப்பட்டது. இதனை வழங்குவதற்காக மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ.உ.ஜெகதீஸ்வர குருக்கள், நாவற்குடா மெதடிஸ்த திருச்சபையின் போதகர் ரவி முருகுப்பிள்ளை மற்றும் மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம இமாம் மௌலவி ஆ.நியாஸ் ஆகிய மதகுருமார் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்திருந்ததுடன், இவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டு கௌரவம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










