
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக பசுமையான நஞ்சற்ற நாடு எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை உரப்பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று 15.03.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.கே.ஜெகன்நாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி பணிப்பாளர் திரு.வீ.பேரின்பராசா, உரக் கம்பனிகளின் உயரதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உர விநியோக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மேலும் பல துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது நோயற்ற ஒரு சமூகத்தின் நஞ்சற்ற உணவை நோக்கிய பயணத்தில் கால போக நெற்செய்கையாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலவச இயற்கை உர வகைகளின் பாவனை மற்றும் பயன்கள் தொடர்பாக இதன்போது வருகை தந்திருந்த இரண்டு உர கம்பனிகளின் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு இவ்விரு நிறுவனத்தினாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரவ உரம் மற்றும் சேதன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், இதன்மூலம் சிறந்த பயனை அடைய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அரச அங்கிகாரத்துடன் ரஜரட்டை பல்கலைக்கழகத்தினால் சிபார்சு செய்யப்பட்ட உர வகையென இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.







