கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் ஈழமதி ஜப்பார் எழுதிய மதிபாடும் நதிகள் எனும் கவிதை நூல் மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களிடம் நூலாசிரியரால் அண்மையில் கையளிக்கப்பட்டது.
பீ.எம்.கே. றஹ்மதுல்லா எனும் இயற்பெயருடைய இவர் எழுதிய இந்நூலில் கிழக்கிலங்கை மற்றும் கல்விப் புலமைமிக்கவர்களின் வரலாறுகள் என்பன கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன.
1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆந் திகதி பிறந்த ஈழமதி ஜப்பார் 1978 ஆம் ஆண்டு தொடக்கம் தினகரன், டெய்லிநியூஸ் பத்திரிகைகளின் நிருபராக எழுத்துத் துறைக்குள் பிரவேசித்தார். கட்டுரைகள், நாடகம், கவிதை என இவரது இலக்கியப் படைப்புக்கள் பத்திரிகை, வானொலி மற்றும் பிரசுரங்களில் தொடர்ச்சியாக வெளிவந்தன.
அட்டாளைச்சேனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியினையும், அல்அஸ்ரப் வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியினையும் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே கவிதைத்துறை, எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள இவர் மாவட்டமட்டம், மாகாணமட்டங்களில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு அரச பணியாளர். பிரதேச செயலகத்தில் சுமார் 34 வருடங்கள் சேவையாற்றி, 2017 இல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மும்மொழியிலும் தேற்சி பெற்ற இவர் மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டதுடன், சுமார் 17 வருடங்கள் அமைச்சரின் பிரத்தியேக உதவியாளராக பாலமுனை, அக்கரைப்பற்று, அம்பாறை, ஒலுவில், அட்டளைச்சேனை பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





