போசாக்குக் குறைவான மக்களுக்குரிய போசாக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட திட்டங்களை இனங்காணப்பட்ட போசாக்குக் குறைவான மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களில்  அமுல்படுத்த  ஜனாதிபதி செயலகம்  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது.

 இதன்படி இனங்காணப்பட்ட அனுராதபுரம், மன்னார், இரத்தினபுரி ,நுவரெலியா, ஹம்மாந்தோட்டை கிளிநொச்சி, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த விசேட திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் முன்வந்துள்ளது. இதற்கமைய போசாக்குக் குறைவான மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த விசேட திட்டத்தினை அமுல்படுத்துவது பற்றித் திட்டமிடும் விசேட செயலமர்வொன்று 21.06.2019 அன்று  மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி  சுதர்சினி  ஸ்ரீகாந்த் அவர்களின்  தலைமையில்  நடைபெற்றது.

இச்செயலமர்வில்  மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, வேல்ட்விசன், சர்வதேச தொண்டர் ஆர்வ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு.ஜே.ஏ.ரமேஸ்குமார் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பலரும் பிரசன்னமாகியிருந்தனர். இச் செயலம்ர்வின் போது இம் மாவட்டத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறையே சில தொற்றா நோய்களுக்குக் காரணியாக அமைவதாகவும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களிடத்தில் போசாக்குக் குறைபாடு காணப்படுவதாக இனங்காணப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதனைத் தடுக்க அமுல்படுத்த வேண்டிய திட்டங்களும் வகுக்கப்பட்டன.