
மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புனர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
அரசாங்க அதிபர் அவர்களின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தரினால் சிரமதான நடவடிக்கை மாவட்ட செயலக வளாகத்தில் 17.05.2022 அன்று இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் இச்சிரமதான நடவடிக்கையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாவட்ட செயலக வளாகத்தினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடப்பதுடன், டெங்கு நுளம்பு பரவலில் இருந்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







