
மட்டக்களப்பு மாவட்ட செயலக சமூர்த்தி பிரிவில் கடமையாற்றும் திரு .தவராசா சுரேஸ் எனும் உத்தியோகத்தர் புகையற்ற புதிய வகை அடுப்பினை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த அடுப்பினை நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் இக்காலகட்டத்தில், எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய புதிய வகை அடுப்பினை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் இதன் செயல் திறன் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
குறித்த புதிய வகை அடுப்பின் பாவனையானது தற்போதய கால கட்டத்தின் தேவை கருதி தான் இதனை உருவாக்கியதாக இதன் போது குறித்த உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் கூட இவ் அடுப்பினை பாவனைக்கு உட்படுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டுள்ள இக் காலகட்டத்தில் புதிய புகையற்ற அடுப்பினை பாவனை செய்வதன் மூலம் பணத்தினை மிதப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவன் மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் திரு.கே.தயாபரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.






