WhatsApp Image 2022 07 19 at 6.36.57 AM

மட்டக்களப்பு தாழங்குடா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு 19.07.2022 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபா் திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பெற்றோல் விநியோகம் ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படுகிறது. சீ.பி.சி யினால் வழங்கப்படும் பெற்றோல் முழுமையாக சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட் டு  வருகிறது. இதன் அடிப்படையில் ஏனைய அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தரக்ள் கடமைக்குச் செல்வதில், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமங்களை எதிர் கொண்டு வந்தார்கள். இதன் அடிப்படையில் நாங்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து தொலைவில் இருக்கின்ற கிரான், வாகரை, கோப்பாவெளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஊழியர்களை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து எரிபொருள் நிரப்புவதில் பாரிய சிரமம் ஏற்படும். இதன் காரணத்தினால், அந்தப் பகுதி அரசாங்க அலுவலகப்பிரதானியுடன் தொடர்பு கொண்டு, நீங்கள் மிக அவசியமான உத்தியோகத்தர்களுக்கான எரிபொருளை ஒரு கொள்கலனில் கொள்வனவு செய்து அங்கு சென்று விநியோகிக்குமாறு கேட்டிருந்தோம்.

இதனை பொலிசாருக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம், உரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தாருக்கும் தெரிவித்திருந்தோம். ஏனென்றால் எமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களே இருக்கின்றன. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பல ஐ.ஒ.சி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மட்டுப்பாடான நிலையையும், நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு, உத்தியோகத்தர்களுக்கும் நெருக்கடியான நிலைமை இருப்பதனால் இவ்வாறானதொரு ஏற்பாட்டை திணைக்களத்தின் பிரதானிகள் ஒரு குறித்த அளவு பெற்றோலை கொள்கலனில் பெற்று அலுவலர்களுக்கு வழங்கினால் அவர்களது செயற்பாடுகளை தங்கு தடையின்றி முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். இது விடயமாக சமூர்த்தி முகாமையாளர்கள் உள்ளிட்ட பலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த வேளை, ஒரு சில பொது மக்கள் அவர்களது சிரமங்களைப் புறந்தள்ளி முழுமையாக அரசாங்க ஊழியர்களுக்காக எரிபொருளை பெறவந்திருக்கின்றோம் என்ற ஒரு தவறான புரிதலுடன், அலுவலக வாகனங்களில் இருக்கின்ற கொள்கலன்களை தூக்கி எறிந்து அலுவலர்களின்  நடவடிக்கைகளை மனங்கோணும் வகையில் நடந்து கொண்டிருந்தார்கள். இது உண்மையாகவே எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு மன அசௌகரியத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வேறு வேறு விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததன் வகையில் இவ் விளக்கத்தினை வழங்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இதன்போது தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.