
உள்ளகக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் ஊழியர்களுக்கான நான்குநாள் பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உள்ளகக் கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் தொழில்வாண்மையை விருத்தி செய்வதற்கான இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்திரி தலைமையில் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயலமர்வின் போது உள்ளக கணக்காய்வின் அரச நிதி,நிர்வாக முறைமைகள் மற்றும் சுற்று நிருபங்களை பின்பற்றி மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பூரண விளக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளகக் கணக்காய்வின் போது ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக விளக்கங்கள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் திரு.எ.எம்.மாஹிர் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி. இந்திராவதி மோகன்,உதவி அரசாங்க அதிபர் திரு.ஆ.நவேஸ்வரன் , மற்றும் அம்பாறை மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.என்.ரமேஷ், திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.ஏ.எல்.மஃரூப் மற்றும் பல உயரதிகாரிகள் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.






