
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் "Smart Secretariat" எண்ணக்கருவிலான இணையத்தள சேவையை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நிகழ்வு 05.01.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் திரு ஆறுமுகம் நவேஷ்வரன் அவர்களின் தலைமையிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி லக்சிகா கதீசன் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
இதன்போது இவ்வருடத்திலிருந்து (2023) "Smart Secretariat" ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இருப்பு கணக்கெடுப்பு, கேட்போர் கூட முன்பதிவு மற்றும் தபால் முகாமைத்துவ முறைமை என்பன தொடர்பாக மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் பயிற்சி அளிக்கப்பட்டது.
அத்துடன் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க நிருவாக நடவடிக்கைகளை கணக்கெடுக்கும் முறைமை ஊடாக அலுவலர்கள் தொடர்பான விடுமுறை, தினக்குறிப்பேடு, மற்றும் வேலை முன்நிகழ்ச்சித் திட்டம் போன்றவற்றை பின்பற்றுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் "Smart Secretariat" எண்ணக்கரு முன்னாள் அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







