DSC 0148 resizedஅரசாங்கத்தின் தேசிய திட்டத்தினை முதலில் அமுல்படுத்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

 2022 மற்றும் 2023 பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியில் முதலாவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையுரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான 10 kg அரிசி பொதிகளை வழங்கியுள்ளார்.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்திக்காக காத்திருப்பவர்கள், முதியோர்கள், விசேட தேவைக்குரியவர்கள் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு பெறுபவர்கள்  போன்ற 10,151 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10kg  வீதம் 2  மாதத்திற்கான 20kg  அரிசி வழங்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக இன்றைய தினம் 291 பயனாளிகளுக்கு அரிசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பிரதேச செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லே இவ்வாறு அரிசியாக்கபட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி,  மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன், விவசாய திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டதுடன், பயனாளிகளுக்கான அரிசிப்பொதிகளையும் வழங்கியிருந்தனர். நிகழ்வின் நிறைவில் அரிசிப்பொதிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

DSC 0148 resized IMG 20230308 WA0176 resized DSC 0164 resized DSC 0154 resized