
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலமதி பத்மராஜா அவர்களின் தலைமையிலான குழுவினருடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 25.04.2023 அன்று இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள வளங்கள் பற்றி கனேடிய தூதுவர் அறிந்துகொள்ளுவதற்காக மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் முன்னளிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கனேடிய தூதுவருக்குத் தெளிவுபடுத்தினர். அத்துடன் கனேடிய தூதுவரை கௌரவிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் திரு எம். வினோத், மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







