
மட்டக்களப்பு மாவட்டதில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங் அதிபர் திருமதி. சுதர்சினி ஶ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.05.2023 அன்று இடம் பெற்றது.
மாவட்டத்தில் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் மற்றும் சிறுவர், பெண்கள் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மாவட்டத்தில் காணப்படுகின்ற தற்காலிக பெண்கள் காப்பகத்தில் உள்ளவர்களை பராமரித்து அவர்களுக்குத் தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர்களை குடும்பத்துடன் இணைப்பாக்கம் செய்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்ட அறிக்கை மாவட்ட செயலகத்திக்கு மாதாந்தம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,வைத்திய அதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ்.அருணாளினி. மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர், நிகழ்விற்கான நிதி அனுசரனை தேவை நாடும் மகளிர் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







