
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த கிழக்கு மாகாண ஆளுனரினால் அண்மையில் விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. இச்செயலணியின் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 16.06.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர் தற்போதைய தரவுகளின் மூலம் மாவட்டத்தில் டெங்கு நோயாயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை சுட்டிக்காட்டியதுடன் அனைவரும் ஒன்றினைந்து டெங்குவை ஒழிக்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏறாவூர், செங்கலடி, கோரளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, காத்தான்குடி பிரதேசங்களில் டெங்குவின் பரவல் அதிகரித்து காணப்படுவது இக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனவரி மாதம் முதல் யூன் மாதம் 15ஆம் திகதிவரை மாவட்டத்தில் 1219 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மாவட்டத்தின் பலபாகங்களிலும் பிரதேச சுகாதார அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், மாநகரசபை, பொலிசார், முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெங்கு பரவக்கூடிய ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகங்கள், சமுர்த்தி பயன்பெறுனர், பொதுமக்கள், அனைவரும் ஒன்றிணைந்து டெங்கினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், முப்படையினர், பொலிசார், சுகாதார அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.







