
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் சிரமதானங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு கே.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் 06.07.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது செயலகத்தில் சேவையாற்றுகின்ற பல்வேறு அரச திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளைகளின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாவட்ட பூச்சியலாளர் திருமதி கே. தர்ஷினி அவர்கள் டெங்கு பரிசோதனை கள விஜயத்தின் போது காணப்பட்ட டெங்கு குடம்பிகள் உருவாகும் இடங்களை அடையாளப்படுத்தப்பட்ட விபரங்களுடன் தெளிவு படுத்தினார்.
கலந்துரையாடலின் இறுதியில் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு கே. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் 07.07.2023 அன்று செயலக வளாகத்திலுள்ள 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, சிரமதானம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளும் மாவட்ட செயலகத்திலுள்ள இரண்டு அல்லது மூன்று திணைக்களப் பிரிவுகள் குழுவாக மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டைப் பகுதி, கோட்டை முன் மற்றும் பின் நுழைவாயில் பகுதிகள், வாவியை அண்மித்த இடங்கள் என செயலக வளாகத்தின் சிரமதான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






