
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான, கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான, பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் 04.08.2023 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கௌரவ ஹாபீஸ் நசீர் ஹகமட், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்வெற, அசோக் பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் வட்டகொட, உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் அவர்களது உணவு பாதுகாப்பு தொடர்பான உரையினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் விரிவாக விளக்கமளித்ததுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அரசியல் பிரிதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி உறுதிகள், வீடமைப்பு திட்டத்திற்கான காசோலைகள், விவசாயிகளுக்கான விதைகள், மரக்கன்றுகள், விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள், விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உழவு இயந்திரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பஸ் பாஸ் உள்ளிட்டவை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது கரங்களினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







