ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சுடன் உள்ளக நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து செயல்படுத்தி வருகின்ற கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம் 15.08.2019 மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட (கமறெக்கும) முதல் ஆரம்பக் கூட்டம் 15.08.2019 அன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி செயலகத்தின் கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.எச்.டீ.கமல் பத்மசிஸ்ரீ அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு இச்செயலமர்வினை முன்னெடுத்தார்.

அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் உரையாற்றுகையில், இந்த கிராம பாதுகாப்பு குழுக்கூட்டமானது எமது மக்களுக்கு கிராம மட்டத்திலிருந்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய தேவையினை உணர்ந்து கொண்ட எமது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் உதயமானது. இதனை மாவட்டத்தில் சகல கிராமங்களிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை கிராம சேவை உத்தியோகத்தர்கள் மத்தியில் உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் கிராம பாதுகாப்பு எனும் போது மக்களுக்கான பாதுகாப்பு, யானைத்தாக்கம்,டெங்கு பாதுகாப்பு, மது பாவனைக்கு அடிமையாகாமல் பாதுகாத்தல், மற்றும் பொருளாதாரத்தினை நிலைபேறானதாக பாதுகாத்தல் என பல்வகையான விடயங்களையும் உள்ளடக்கியதாக பாதுகாப்புக்குழு சுபீட்சத்தையும் கிராம மட்டத்தில் உருவாக்கும் நோக்குடன் செயல்ப்படுத்தப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு நாட்டில் இயங்குகின்ற முப்படைகள், மற்றும் பொலிஸ் ஆகியோருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. இக்கூட்டத்திற்கு படைப்பிரிவுகளின் பிரதானிகள் கலந்து கொண்டனர். அவர்களின் ஒத்துழைப்புகளுடன் கிராம சேவகர்கள் இணைந்து குழுக்கள் அமைக்க வேண்டியதையும் அரசாங்க அதிபர் இங்கு சுட்டிக்காட்டினர்.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாகவே இச்செயல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இவ்வாறான கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் (கமறெக்கும) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. என பணிப்பாளர் நாயகம் திரு.எச்.டீ.கமல் பத்மசிஸ்ரீ அவர்கள் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், பாதுகாப்பு படையினர், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

DSC 0795DSC 0803DSC 0805DSC 0813DSC 0814DSC 0828 resizedDSC 0844DSC 0832