நாட்டில் வளர்ச்சி கண்டு வரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சுற்றுலாத்துறை சார்ந்த விசேட திட்டங்களை அமுல்படுத்த அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த விசேட திட்டத்திற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 401 சுற்றுலா விடுதிகளில் கடமை புரியும் பணியாளர்களுக்கு சுற்றுலாதுறை தொடர்பான ஆரம்ப கட்ட விசேட பயிற்சிநெறி உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளின் பயிற்றுனரால் விசேட பயிற்சி நெறிகள் சுமார் 5 நாட்களுக்கு வழங்கிவைக்கும் திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு விவசாய மற்றும் கைத்தொழில் வர்த்தக சம நலத்தின் மேற்பார்வையில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இந்த விசேட பயிற்ச்சிநெறியை பூர்த்தி செய்த 83 பணியாளர்களுக்கு திறமைச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு “ரீட்டோ” தனியார் விடுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய கைத்தொழில் வர்த்தக தேசிய சம்மேளனத்தில் தலைவர் திரு.எம்.எச்.எம் நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயிற்சிகளை பூர்த்தி செய்த சுற்றுலா மையங்களின் பணியாளருக்கு திறமை சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வர்த்தக தேசிய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் திரு.அஜித் டி பெரேரா அவர்கள் அவுஸ்திரேலியா நாட்டு பிரதிநிதி திரு.டேவிட் அப்லட் அவர்கள் உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பயிற்ச்சியில் விடுதி பராமரிப்பாளர்கள், உபசரிப்பாளர்கள், அனுசரனையாளர்கள், மற்றும் முகாமையாளர் உட்பட பல துறைகளில் சர்வதேச சுற்றுலாத்துறை தொடர்பான அனுபவமுள்ள பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.








