அரசாங்கத்தின் என்ரபிறைஸ் சிறிலங்கா இலகு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள், மீனவர்கள், மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு சுமார் 5 கோடி ரூபா நிதியில் இலகுகடன் தொகையானது 19-08-2019 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வுகளில் வழங்கி வைக்கப்பட்டது.
கெளரவ பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் இந்த என்ரபிறைஸ் சிறிலங்கா இலகு கடன் திட்டத்தில் விவசாயிகள், மீன்பிடி கைத்தொழில் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், சூரிய சக்தியில் மின்சாரம் வழங்குதல் உட்பட பல துறைகளில் தொழில் முயற்சிகள் மேற்கொள்ள இந்த கடன் திட்டங்கள் வழங்கப்பட்டதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் திரு கே.சத்தியநாதன் தெரிவித்தார். குறித்த இலகு கடன்கள் இன்று குறித்த வங்கியின் மாகாண அலுவலகம், மாவட்ட அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு புதிய கிளை ஒன்று திறந்துவைக்கும் நிகழ்விலே இந்த இலகு கடன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் சட்டத்தரணி திரு.சுஜித் பிரசன்ன காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவன் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் கருத்து வெளியிடுகையில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க கெளரவ பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அறிமுகம் செய்துள்ள என்ரபிறைஸ் சிறிலங்கா திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் இலகு கடன்களை வழங்கி பிரதேச அபிவிருத்தி வங்கி நாட்டில் புதிய முயற்சியாளர்களையும், விவசாய கால்நடை உற்பத்தியாளர்களையும், மீனவர்கள், கைத்தொழில் உற்பத்தியாளர்கள், மற்றும் சுற்றுலாத்துறை சார்பான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலாபத்தை நோக்காக அல்லாது அறிமுகப்படுத்தப்படும் இந்த இலகு கடன்திட்டத்தில் இப்பிரதேச மக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே எங்களது வங்கியின் குறிக்கோள் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திரு.ஆர்.எம்.ஆர்.றந்தெனிய, மாவட்ட முகாமையாளர் திரு.வை.வீ.அஸ்ரப், பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் திரு.ஏ.எம்.றிபாய் குறித்த வங்கியின் இரண்டாவது கிளையின் முகாமையாளர் திருமதி.எஸ்.குவேந்திரராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.





